Sunday, 11 September 2016

Chitra Sabha Temple (Temple of Paintings), Courtallam, Tamilnadu

சித்திர சபை, குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.

கூத்தப்பெருமான் ஆடும் ஐந்து அம்பலங்களுள் ((ரத்தின சபை திருவாலங்காடு (ஊர்த்துவ தாண்டவம்), கனகசபை சிதம்பரம், வெள்ளி சபை மதுரை, சித்திரசபை திருக்குற்றாலம், தாமிரசபை திருநெல்வேலி) நான்காவது அம்பலம் திருக்குற்றாலத்தின் சித்திர அம்பலம் எனப்படும் சித்திரசபை. இது திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் உள்ளது. இச்சபை குற்றாலநாதர் கோவிலில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் வடக்கு திசையில் தனிக்கோயிலாக அமைந்திருக்கிறது. இச்சபையின் எதிரே தெப்பக்குளம் இருக்கிறது. சுற்றிலும் மதில் இருக்க நடுவே சித்திர சபை அமைந்திருக்கிறது. மரத்தாலேயே ஆன அற்புத வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த சித்திரசபை பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும். மரக்கோவிலின் கூரை சிதம்பரத்துக் கோவிலின் கூரையை நினைவூட்டுகிறது என்றால் அது மிகையல்ல.
சித்திரசபையின் நுழைவாயில்.
சித்திரசபை எதிரே உள்ள தெப்பக்குளம்,
இந்த சித்திரசபையில் இரண்டு மண்டபங்கள் இருக்கின்றன. ஒரு மண்டபத்தில் நிறைய சாளரங்கள் இருக்கின்றன. இந்த கூடத்தின் நடுவே ஒரு சிறு மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. திருவாதிரை நாளில் நடராஜப் பெருமான் இந்த மேடையில் வந்தமர்ந்து எல்லோருக்கும் காட்சி தருகிறார். கூடத்தின் நான்கு பக்கங்களிலும் அற்புத ஓவியங்கள் அழகுடன் வரையப்பட்டிருக்கின்றன. சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்கள் அனைத்தும் சித்திரங்களாக அழகுடன் தீட்டப்பட்டிருகின்றன. 
                    முதல் மண்டபத்தில் ஓவியங்கள்
உள் மண்டபத்தில் நடராஜர் ஓவியம்.
இந்த ஓவியங்களில் நடராஜபெருமான், மதுரை மீனாட்சி கல்யாண வைபவம், முருகரின் அவதாரங்கள், பத்மநாதசுவாமி, எட்டு அவதாரங்களில் துர்க்கை மற்றும் பைரவ சுவாமிகள், விநாயகர் உள்ளிட்ட பல்வேறு சித்திரங்கள் பளிச்சென காணப்படுகின்றன. சித்திரங்களைக் காணச் சென்றால் எதைப் பார்ப்பது எதை விடுவது என்ற பிரமிப்பைத் தூண்டும் வகையில் இந்த வண்ண ஓவியங்கள் அமைந்திருக்கின்றன. இச்சபையின் வடகிழக்கு மூலையருகே நிற்கு தெற்கு நோக்கிப் பார்த்தால் திருகூட மலையின், அதாவது மூன்று சிகரங்களையுடைய மலையின் திருக்காட்சியினையும் காணாலம் என்பது ஒரு சிறப்பு.
மற்றுமொரு பயண அனுபவத்தில் சந்திப்போம் நண்பர்களே!

No comments:

Post a Comment