Sunday, 11 September 2016

Chitra Sabha Temple (Temple of Paintings), Courtallam, Tamilnadu

சித்திர சபை, குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.

கூத்தப்பெருமான் ஆடும் ஐந்து அம்பலங்களுள் ((ரத்தின சபை திருவாலங்காடு (ஊர்த்துவ தாண்டவம்), கனகசபை சிதம்பரம், வெள்ளி சபை மதுரை, சித்திரசபை திருக்குற்றாலம், தாமிரசபை திருநெல்வேலி) நான்காவது அம்பலம் திருக்குற்றாலத்தின் சித்திர அம்பலம் எனப்படும் சித்திரசபை. இது திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் உள்ளது. இச்சபை குற்றாலநாதர் கோவிலில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் வடக்கு திசையில் தனிக்கோயிலாக அமைந்திருக்கிறது. இச்சபையின் எதிரே தெப்பக்குளம் இருக்கிறது. சுற்றிலும் மதில் இருக்க நடுவே சித்திர சபை அமைந்திருக்கிறது. மரத்தாலேயே ஆன அற்புத வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த சித்திரசபை பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும். மரக்கோவிலின் கூரை சிதம்பரத்துக் கோவிலின் கூரையை நினைவூட்டுகிறது என்றால் அது மிகையல்ல.
சித்திரசபையின் நுழைவாயில்.
சித்திரசபை எதிரே உள்ள தெப்பக்குளம்,
இந்த சித்திரசபையில் இரண்டு மண்டபங்கள் இருக்கின்றன. ஒரு மண்டபத்தில் நிறைய சாளரங்கள் இருக்கின்றன. இந்த கூடத்தின் நடுவே ஒரு சிறு மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. திருவாதிரை நாளில் நடராஜப் பெருமான் இந்த மேடையில் வந்தமர்ந்து எல்லோருக்கும் காட்சி தருகிறார். கூடத்தின் நான்கு பக்கங்களிலும் அற்புத ஓவியங்கள் அழகுடன் வரையப்பட்டிருக்கின்றன. சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்கள் அனைத்தும் சித்திரங்களாக அழகுடன் தீட்டப்பட்டிருகின்றன. 
                    முதல் மண்டபத்தில் ஓவியங்கள்
உள் மண்டபத்தில் நடராஜர் ஓவியம்.
இந்த ஓவியங்களில் நடராஜபெருமான், மதுரை மீனாட்சி கல்யாண வைபவம், முருகரின் அவதாரங்கள், பத்மநாதசுவாமி, எட்டு அவதாரங்களில் துர்க்கை மற்றும் பைரவ சுவாமிகள், விநாயகர் உள்ளிட்ட பல்வேறு சித்திரங்கள் பளிச்சென காணப்படுகின்றன. சித்திரங்களைக் காணச் சென்றால் எதைப் பார்ப்பது எதை விடுவது என்ற பிரமிப்பைத் தூண்டும் வகையில் இந்த வண்ண ஓவியங்கள் அமைந்திருக்கின்றன. இச்சபையின் வடகிழக்கு மூலையருகே நிற்கு தெற்கு நோக்கிப் பார்த்தால் திருகூட மலையின், அதாவது மூன்று சிகரங்களையுடைய மலையின் திருக்காட்சியினையும் காணாலம் என்பது ஒரு சிறப்பு.
மற்றுமொரு பயண அனுபவத்தில் சந்திப்போம் நண்பர்களே!

Saturday, 3 September 2016

MEGAMALAI, THENI Dt, TAMIL NADU



மேகமலை
பயணம் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளது. பயணம் ஒரு சுற்றுலாவாக அமைந்தால் அது பொழுதுபோக்கு, அனுபவம், இன்பம் மற்றும் மனநிறைவு என்று முடியும்.  இதனால் நமது அறிவு விரிவடைவடைகிறது. பயணத்தை விரும்பி மேற்கொள்பவருக்கு அது ஒரு சாகச அனுபத்தை கொடுப்பதுடன், மன அழுத்தத்திலிருந்தும் அவரை விடுவித்து உடலைக் காக்கிறது.
தமிழ்நாட்டில் கண்ணிற்கிணிய காணும் இடங்கள் பல உள்ளன என்பது எனக்குத் தெரியும். எனினும் பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு உடல்நலத்தைப் பேணவும், விடுமுறை நாட்களை கழிக்கவும்  பொருத்தமான ஒரு இடத்தை விசாரித்த போது கன்னிக் காடுகளை தன்னகத்தே கொண்ட ஒரு மலைப் பகுதியான மேகமலையே அதற்கு பொருத்தமாக இருக்கும் என எனது நண்பரும் சின்னமனூரை பூர்விகமாகக் கொண்ட திரு ஏ.எம்.எம்.ஜோதிமுருகன் அவர்கள் வாயிலாகத் தெரிந்து கொண்டேன்.
நண்பர் திரு ஏ.எம்.எம்.ஜோதிமுருகனுடன் நானும், எனது குடும்பத்தாரும் சின்னமனூரிலிருந்து காலை 9.00 மணியளவில் வாடகைக்கு S.U.V. (Sports Utility Vehicle) - ஐ அமர்த்திக் கொண்டு சின்னமனூரிலிருந்து மேகமலையின் ஹைவேவிஸை நோக்கி (35 கிலோ மீட்டர்) பயணித்தோம். மலையடிவாரத்தில் தென் பழனி என்ற ஊரிலுள்ள தமிழ்நாடு அரசு வனத்துறையின் சோதனைச்சாவடி பணியாளரின் பரிசோதனை மற்றும் மலையின் மீது தங்க வேண்டுமென்றால் அத்தகவலை இங்கு தெரிவிக்க வேண்டும் அல்லது அன்றே திரும்ப வேண்டுமென்றால் மாலை 5.00 மணிக்குள் திரும்பி விட வேண்டும் என்ற அறிவுகளுக்குப் பிறகு பயணத்தை தொடர்ந்தோம்.

தென்பழனிக்கு அடுத்து சாலையின் அடையாளங்களாக ஜல்லிக் கற்கள் ஆங்காங்கே தெரிந்தன. இம்மலைப் பாதை மிகவும் கரடுமுரடாக இருந்தன, ஆகவே மகிழ்வுந்துகளில் பயணிப்பது வாகன நலனுக்கும், நமது முதுகெலும்புகளுக்கும் உகந்ததல்ல. காஸ்ட்லியான காரில் (S.U.V.) சென்றாலும் கிடைத்தது கட்டை வண்டியில் சென்ற அனுபவமே. ஒரு கொண்டை ஊசி வளைவில் நின்று தென் கிழக்கு திவையில் சமவெளியை பார்த்த போது சிறு கிராமங்களுடன் வருசநாடு பகுதி தெரிந்தது, அப்பகுதியில்தான் சின்ன சுருளி அருவி இருப்பதாக நண்பர் தெரிவித்தார்.



 காஸ்ட்லியான காரில் சென்றாலும் கட்டை வண்டியில் பயணித்த அனுபவம் தரும் சாலைகள்.
18 கொண்டை ஊசி வளைகளைக் கடந்து மேகமலையின் முகப்பாக விளங்கும் ஹைவேவிஸ் அணைப்பகுதியினை 11.00 மணியளவில் அடைந்தோம். அங்கிருந்து சிறிது தொலைவில் மேற்கே நோக்கினால் பச்சை போர்வையினை போர்த்திய மலைகளின் பின்னணியில் நீல நிற வளைந்து நெளிந்த ஹைவேவிஸ் நீர்த் தேக்கத்தை காண முடிந்தது, இது காண்பதற்கு கொள்ளை அழகாகவும், மனதிற்கு இதமாகவும் இருந்தது என்றால் அது மிகையல்ல. 



                                                        ஹைவேவிஸ் அணை

 ஹைவேவிஸில் ஒரு அழகிய காட்சி
அடுத்து ஒரு சில கிலோமீட்டர் தொலைவில் இருந்த நீர்த் தேக்கத்தின் கரையோரமாகவே சாலை வளைந்து, நெளிந்து சென்று சிறு பாலத்தினை கடந்து அக்கரைக்குச் சென்று கொண்டேயிருந்தது, அது மணலாறு நீர்த் தேக்கம். அணைக்குள் அணை கட்டுவதற்கு முன் இருந்த Black topped சாலை பாம்பு போல வளைந்து நெளிந்து காணப்பட்டது. செல்லும் வழியெங்கும் பச்சை தேயிலை தோட்டங்ளின் அணிவகுப்பு மலைக்கு பசும் போர்வை போர்த்தியது போல இருந்து. வழியில் அடிப்படை வசதிகள் குறைந்த பல சிற்றூர்கள் காணப்பட்டன. இங்குள்ள மக்கள் அனைவரும் தேயிலைத் தோட்டப் பணிக்கு கடந்த நூற்றாண்டில் சமவெளிகளிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள். 
 ஹைவேவிஸ்ஸில் உள்ள ஒரு தங்குமிடம்.

அடுத்து நாங்கள் சென்ற வாகனம் நின்ற இடத்தில் முதல் நாள் இரவில் முள்ளம்பன்றிக்கும் வேறொரு விலங்கிற்கும் சண்டை நடந்ததற்கான அறிகுறியாக முள்ளம்பன்றியின் முட்கள் சிதறி கிடந்தன. அங்கிருந்து மேல்நோக்கி சில நிமிடங்கள் நடந்தால் ஒரு உச்சிப் பகுதி தெரிந்தது அதுவே மஹாராஜா மெட்டு. இங்கு காவல் துறையின் wireless transmission கட்டிடம் உள்ளது. இங்கிருந்து வடக்கு, வட மேற்கு, வட கிழக்கு திசைகளில் நோக்கினால் கம்பம் பள்ளத்தாக்கு, கூடலூர், சுருளி நீர் வீழ்ச்சிப் பகுதி ஆகியவற்றை காண முடிந்தது. தென்கிழக்கில் நோக்கினால் ஒரு அழகான நீர்த்தேக்கம் பின்னணியில் மரங்களடர்ந்த வனம் காண்போரின் கவனத்தை ஈர்த்தது. அது இரவங்கலார் அணை. காண்போரின் கண்களையும், கவனத்தையும் நிச்யம் ஈர்க்கும் அப்படியொரு அழகு, அது வானத்தின் நீல நிறமும், தேயிலைத் தோட்டத்தின் பசும் போர்வை நிறமும் சேர்ந்து தோன்றும் ஒரு வசீகரம். 

மகாராஜா மெட்டில் நண்பர் ஏ.எம்.எம்.ஜோதிமுருகன்.
பசுமை போர்த்திய மலைகளும், வெண் மேகங்களும் ஒன்றையொன்று தழுவிக்கொண்டிருக்கக் கூடிய இடம் மேகமலையென்றால் அது மிகையல்ல. கவனியுங்கள் பெயரிலேயே மேகங்களும், மலைகளும் சேர்ந்திருப்பதை. திரும்பிய பக்கமெல்லாம் தேயிலைத் தோட்டங்கள், அவற்றிற்கிடையே ஏலக்காய் தோட்டங்களும், காஃபி தோட்டங்களும் மற்றும் மின்சார வாரியத்தின் சில நீர்த் தேக்கங்களும் காண முடிந்தது. இந்த அணைகள் அனைத்தும் தமிழ்நாடு மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. அணைப்பகுதிக்குள் செல்ல அனுமதி இல்லையெனினும் அருகிலிருந்து பார்த்தாலும், தொலைவில் இருந்து பார்த்தாலும் அவற்றின் அழகே அழகுதான். இதில் தூவானம் என்ற அணை ஒரு அழகுப் பிரதேசம் என்றறிந்தோம், ஆனால் அங்கு செல்வதற்கு மின்வாரியத்தின் முன் அனுமதி வேண்டும் என்று தெரிவிக்கப்ட்டதால் அங்கு செல்ல இயலவில்லை. இந்த நீர்த் தேக்கங்களிலிருந்து வெளியேரும் நீர் இரைச்சல் பாறை வழியாக கம்பம் அருகேயுள்ள சுருளி அருவிக்கு சென்று சுருளியாறு வழியாக வைகைக்குச் சென்று கலக்கிறது. மாலை நெருங்க ஆராம்பித்ததால் சின்னமனூர் நோக்கி பயணத்தை தொடர்ந்தோம்.

இரவங்கலாறு அணை
 இரவங்கலாறு அணையிலிருந்து ஒரு காட்சி


2009 ஆம் ஆண்டில் தமிழக அரசு மேகமலையினை சுற்றுலாத் தலமாக அறிவித்தது போதுதான் இவ்வளவு அழகான, காண்பதற்கிணிய, மாசற்ற இடம் இருப்பது மக்களுக்கு தெரிய வந்தது. 600 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதில் 200 சதுர கிலா மீட்டர் பரப்பளவு தேயிலைத் தோட்டங்கள் மற்றும் ஏனைய தோட்டங்கள் ஆக்கிரமித்துள்ளன. இது ஒரு கோடை வாஸஸ்தலம் மட்டுமல்ல விலங்குகளை காணுமிடங்கள், மலையேற்ற பயிற்சி பாதைகள் போன்ற அம்மசங்களும் உள்ளன. மேகமலை பகுதிக்கு தென் கிழக்கே ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அமைந்துள்ள Grizzled Squirrel (இது தலை நரைத்த அணில் எனப் பொருள்படும்) வனவிலங்கு சரணாலயமும், புகழ்பெற்ற சதுரகிரியும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேயிலைத் தோட்டம்.

சமவெளிப்பகுதியிலிருந்து மேகமலையினை உற்று நோக்கினால் அதிகமாக அலைகள் போல வளைந்து நெளிந்த, செங்குத்தான குன்றுகளையுடைய மலையாக காட்சி தறுகிறது, இதனால் இம்மலையினை பச்சை கூமாச்சி (Green Peaks) என்று தமிழிலும், High Wavys என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது என்பதை நண்பர் வாயிலாக தெரிந்து கொண்டோம். இங்கு செல்ல ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை உகந்த மாதங்களாகும். மேகமலையில் தங்க சில தங்கும் இடங்களே உள்ளன, சீசன் காலம் என்றால் முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு செல்ல வேண்டும்.
மற்றுமொரு பயண அனுபவத்தில் சந்திப்போம் நண்பர்களே.